தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த 2 தினங்களில் தமிழக, கேரள பகுதிகளை கடந்து அரபிக்கடலுக்குள் செல்லக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் பரவலான இடங்களில் மழை பெய்துள்ளது. 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 11 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மேலும், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மிகக்கன மழையும் பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.