• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

இன்று முதல் டிச.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

Byவிஷா

Dec 24, 2024

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தில் இன்று முதல் டிச.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகக் கரையை மேலும் நெருங்கி வரக்கூடும்.
இதன் காரணமாக இன்று வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 25-ம் தேதி வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 26-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 27-ம் தேதி ஒருசில இடங்களிலும், 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.