வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு அடுத்துவரும் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலைமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இலங்கை கடலோர பகுதியை ஒட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று தமிழகம் – புதுச்சேரி கடற்பகுதி நோக்கி நகருவதால் இன்று முதல் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.