• Wed. May 8th, 2024

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:
தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்

சென்னையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களைவிட பெண்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
தமிழகத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி தொடங்கிய இந்தப்பணி 7-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையொட்டி சென்னையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சாந்தோம் சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர். 7 ஆயிரத்து 758 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். இரட்டை பதிவு, இறப்பு போன்ற காரணங்களால் தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம் அளிக்கலாம். இதற்காக வருகிற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இருப்பிட சான்று மற்றும் வயது சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பிட சான்றாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். 17 வயது நிறைவடைந்து அடுத்த ஆண்டு (2023) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இப்போதே விண்ணப்பம் அளிக்கலாம். எந்த தேதியில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைகிறதோ அப்போது அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 46 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைத்து உள்ளனர். இது 56.19 சதவீதம் ஆகும். கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 83 சதவீதம் பேரும், சென்னையில் குறைந்தபட்சமாக 20.42 சதவீதம் பேரும் ஆதாரை இணைத்துள்ளனர்.
பெரும்பாலான மாவட்டங்களில் 50 சதவீதம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். கடந்த ஆண்டு 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சமாக குறைந்துள்ளது. 17 லட்சத்து 69 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் 7 லட்சம் பேர் புதிதாக பெயரை சேர்த்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர், தந்தை பெயர், முகவரி, வயது, புகைப்படம் போன்றவற்றை ஒப்பிட்டு கணினி வழியாகவே இரட்டை பதிவை கண்டுபிடித்து ஏதாவது ஒரு இடத்தில் பெயரை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒரே பாகத்தில் கூட சிலரது பெயர் 2 அல்லது 3 இடங்களில் இடம் பெற்றிருப்பதும் இதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. வருகிற ஜனவரி 10-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *