

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்பட நாடு முழுவதும் 25 ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 25 வட்டாரங்களில் ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழான 10-ம் சுற்று ஏலத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான ஆழ்கடல் பகுதியில் 9990.96 சதுர கிலோமீட்டர் பரப்பும் இடம்பெற்றுள்ளது. இதேபோல நாடு முழுவதும் 25 வட்டாரங்களைச் சேர்ந்த 1,91,986 சதுர கிலோமீட்டர் கடற்பகுதிகள் ஹைட்ரோகார்பன ஏல அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் ஜூலை 31-ம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான இடங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளிலும், கடல் பரப்பிலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டு தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

