• Sat. Apr 20th, 2024

நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!!

ByA.Tamilselvan

May 13, 2023

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகி வரும் சூழலில் பாஜகவுக்கு அங்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சராக இருந்த பாஜகவின் அரக ஞானேந்திரா சிமோகா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக், ராஜாஜி நகர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். சென்னபட்னா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பின்னடைவில் உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் 117 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் போதுமான நிலையில், காங்கிரஸ் ஆரம்பத்தில் குறைவான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து தற்போது 117 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது பாஜக 74 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற வேட்பாளர்கள் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
எனவே, காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. முன்னிலையில் உள்ள வேட்பாளர்களை உடனடியாக பெங்களூரு வர கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *