சென்னையில், வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில், 49-வது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கு வந்திருந்தார்.அந்த சமயத்தில், கள்ள ஓட்டு போட்டுவிட்டு தப்ப முயன்றதாகக் கூறி ஒருவரைப் பிடித்து அதிமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்தச் சூழலில், திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதேபோல், திமுகவினர் தன்னை தாக்கியதாக ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத 10 திமுகவினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.