• Fri. Mar 29th, 2024

மனைவிக்கு யுடியூப் மூலம் பிரசவம் பார்த்த கணவர் மீது வழக்கு

நெமிலி அருகே யுடியூப் பார்த்துஇளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிமாறன் எச்சரித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோக நாதன்(35). டிப்ளமோ படித்துள்ள இவர் தனது வீட்டின் அருகே மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி (28). நிறைமாத கர்ப்பிணியான கோமதி மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற போது டிசம்பர் மாதம் 13-ம் தேதி பிரசவ தேதி தெரிவிக்கப்பட்டது.ஆனால், டிசம்பர் 13-ம் தேதி கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட வில்லை.


இந்நிலையில், நேற்று முன்தினம் கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாத அவரது கணவர் லோகநாதன் தனது சகோதிரி கீதா என்பவரின் உதவி யுடன், செல்போன் மூலம் யுடியூப்பில் பிரசவம் பார்த்துள்ளார்.

இதில், ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அதேநேரத்தில், கோமதிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த லோகநாதன் தனது மனைவி மற்றும் உயிரிழந்த ஆண் குழந்தையை மீட்டு அருகேயுள்ள புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்சென்றார்.


அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர், ஊழியர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு கோமதியை அனுப்பி வைத்தனர். இருப்பினும், யுடியூப் மூலம் பிரசவம் பார்த்ததால் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ள தகவலை புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் மோகன், நெமிலி காவல் நிலை யத்தில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், நெமிலி காவல் துறையினர் லோகநாதன் மற்றும் அவரது சகோதரி கீதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *