• Thu. Oct 10th, 2024

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் ஒரு பெண் உட்பட 7 பேர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு மொபட்களில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒரு பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசிகளை சேகரிக்கும் பலர் அதனை கேரளாவிற்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு செல்லும் மூன்று பிரதான வழித்தடங்களில் மட்டுமே போலீஸ் சோதனைச் சாவடிகள் உள்ளன. ஆனால் 8 கிராம வழிச் சாலைகள் மூலமாவும் கேரளாவுக்கு செல்லலாம். இந்த வழித்தடங்களில் போலீஸ் கெடுபிடி இருக்காது என்பதால் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கடத்தல் பேர்வழிகள் மொபட், சரக்கு ஆட்டோ, கார், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் தொடர்ந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர். ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக பெண்களும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாலக்காடு ரோடு செடிமுத்தூர் திம்மகுத்து பகுதியில் தாலுக்கா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அடுத்தடுத்து மூட்டைகளுடன் வந்த மொபட்டுகளை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனங்களில் கேரளாவிற்கு கடத்த ரேஷன் அரிசி இருந்தது உறுதி செய்யப்பட்டது.


இதனையடுத்து 5 மொபட்டுகள், பதினெட்டு மூட்டைகளில் இருந்த, 900 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


பொள்ளாச்சி குப்புச்சாமி வீதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60) அவரது மனைவி பத்மாவதி(50)அதே வீதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் குமரன்(48) , ராஜா மில் ரோட்டை சேர்ந்த கிரி மகன் தனசேகரன்(28), கேரளா மாநிலம் சித்தூரை சேர்ந்த நாகராஜ் மகன் ராமகிருஷ்ணன்(37), மற்றும் கேரளா நடராஜ் கவுண்டர் காலனியை சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் தீபக்(21)ஆகிய, 7 பேரையும் கைது செய்தனர்,இதில் 19 வயது சிறுவனைசீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


இவர்கள் கடத்த முயன்ற, 900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய, ஐந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து, குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *