• Wed. Apr 24th, 2024

இந்து முன்னணி பிரமுகர் கார் உடைப்பு.. அதே அமைப்பை சேர்ந்தவர் கைது..!

ByA.Tamilselvan

Sep 28, 2022

கோவை இந்து இளைஞர் முன்னணி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில், அதே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் தாக்குதல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 7 இடங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையம், காமராஜர் நகர் நாடார் காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (21) என்பவர் இந்து இளைஞர் முன்னணி நகர பொறுப்பாளராக இருந்து வருகிறார். கடந்த 26-ம் தேதி ஹரிஷ் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன் பக்க கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஹரிஷ் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தை கோவை எஸ்பி பத்ரி நாராயணன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எஸ்பி பத்ரி நாராயணன் நேற்று(செப்.27-ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் இந்து இளைஞர் முன்னணியை சேர்ந்த ஹரீஷ் என்பவரின் கார் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி தமிழ்ச்செல்வன் (24), அவரது நண்பர் ஹரிஹரன் (25) (எந்த அமைப்பிலும் இல்லை) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளோம். விநாயகர் சதுர்த்தியின் போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சி.சி.டி.வி பதிவு காட்சிகள் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *