கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.
லிபரல் கட்சித் தலைவரான ஐஸ்டின் ட்ரூடோ 2015-ம் ஆண்டு முதல் கனடா நாட்டு பிரதமராக செயல்பட்டு வந்தார். இதனிடையே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு அந்நாட்டு மக்களிடையே பெருமளவு குறைந்து வந்தது. மேலும், சொந்த கட்சிக்குள்ளும் செல்வாக்கு குறைந்தது.
இவருக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான இப்சோஸ், கனடா மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு அளித்தனர். பிரதமர் தேர்தல் நடத்தப்பட்டால், கன்சர்வேர்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொலிவர் 40 சதவீத வாக்குகள் பெறுவார் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது
கனடா பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில் கனடா மீது அதிக அளவில் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பொருளாதார சூழ்நிலை, சொந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடம் ஆதரவு குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ராஜினாமா செய்தார். லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.
அதேவேளை, நாட்டின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக்கால பிரதமராக தொடர்ந்து செயல்படுவதாக ட்ரூரோ அறிவித்துள்ளார்.