• Fri. Apr 19th, 2024

தி.மு.க முன்னாள் எம்.பி.மஸ்தான் மரணத்திற்கு தம்பி மருமகன் காரணம்: விசாரணையில் தகவல்

தி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் மஸ்தானின் தம்பி மருமகன் மரணத்திற்கு காரணம் என போலீசார் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.
தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். முக்கிய பிரமுகர்களுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்து வந்தார். இதற்கிடையே 22ம் தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சென்னையில் இருந்து காரில் சென்றார். காரை அவரது உறவினர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. கூடுவாஞ்சேரி அருகே கார் வந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் மஸ்தானை 5 பேர் கொண்ட கும்பல் முகத்தை பொத்தி அடித்ததாகவும், மஸ்தானின் சகோதரருடைய மருமகன் இதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *