புடின் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாக உக்ரைனை மண்டியிடவைக்க முடியவில்லை.
ரஷ்ய தரப்பில் கடும் இழப்பு, முக்கிய தளபதிகள் முதல் ஏராளம் வீரர்களை இழந்து தவிக்கிறது ரஷ்யா.
புடின் பேச்சை நம்பி உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள், சரியான உணவு கூட இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
ஆக, போரை முடித்துக்கொள்வதுதான் இப்போதைக்கு ரஷ்யாவுக்கு ஒரே வழி. ஆனாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாது என்பது போல, தாங்கள் வெளியேறவேண்டுமானால், உக்ரைன் சில நிபந்தனைகளுக்கு உட்படவேண்டும் என ரஷ்யா எதிர்பார்க்கிறது.
ரஷ்யாவின் நிபந்தனைகளில் ஒன்று, உக்ரைன் தனது இராணுவ பலத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும். ரஷ்யா, அதற்கு demilitarise என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது. அந்த வார்த்தைக்கு, இராணுவமயமற்றதான நாடாகுதல், அதாவது, இராணுவத்தை குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது மொத்தமாகவோ அகற்றுதல், இராணுவ பலத்தைக் குறைத்துக்கொள்ளுதல் என வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன.
எப்படியும் ரஷ்யாவின் நிபந்தனைப்படி உக்ரைன் தனது இராணுவ பலத்தைக் குறைத்துக்கொள்கிறது என்றே வைத்துக்கொள்வோம். வெளியேறுகிறோம் என்று கூறிய ரஷ்யா மீண்டும் தாக்கினால் உக்ரைனின் நிலைமை என்ன ஆகும்?
ஆகவே, ரஷ்யாவின் நிபந்தனைக்கு எதிர் நிபந்தனை ஒன்றை வைத்துள்ளது உக்ரைன். தாங்கள் இராணுவ பலத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டுமானால், தங்கள் பாதுகாப்புக்கு மேற்கத்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரியுள்ளது உக்ரைன்.
இந்நிலையில், பிரிட்டனும், அதன் சர்வதேச கூட்டாளிகளும் உக்ரைனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மீண்டும் ரஷ்யா உக்ரைனைத் தாக்கினால், பிரிட்டனும் , அதன் சர்வதேச கூட்டாளிகளான நாடுகளும் ரஷ்யாவுக்கெதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும்.
ஆக, ரஷ்ய அமைதி ஒப்பந்தத்தின்படி, பிரிட்டன் உக்ரைனின் எதிர்கால பாதுகாவலராக மாறலாம் என நேற்று இரவு தகவல் வெளியாகியுள்ளது.