உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு கோலாகலமாக தொடங்கியது. மக்கள் ஆரவாரத்துடனும், வான வேடிக்கைகளுடனும் அங்கு புத்தாண்டை வரவேற்றனர்.
2021ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நாளை முதல் 2022ம் ஆண்டு தொடங்குகிறது. இந்தப் புத்தாண்டை உலக மக்கள் அனைவரும் கொண்டாடி வரவேற்க தயாராக இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் எல்லோரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் உலகிலேயே முதல் புத்தாண்டு நியூசிலாந்தில் துவங்கியது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
நியூசிலாந்தின் முக்கிய இடமான ஸ்கை டவரைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் புத்தாண்டை வரவேற்க காத்திருந்தனர்.புத்தாண்டின் இரண்டு நிமிடத்துக்கு முன்பிலிருந்து கவுண்ட் டவுன் தொடங்கி ஸ்கை டவரில் டிஸ்பிளே செய்யப்பட்டது. கவுண்ட் டவுன் முடிந்து புத்தாண்டு தொடங்கியதும் ஸ்கை டவரில் தயாராக இருந்த வான வேடிக்கைகள் வெடிக்கத்தொடங்கின. மக்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் குரலெழுப்பி 2022ஐ வரவேற்றனர்.
இதேபோல் நியூசிலாந்தின் பல நகரங்களிலும் மக்கள் கூடி புத்தாண்டவை வரவேற்றனர். நியூசிலாந்துக்கு அடுத்தப்படியாக இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ரஷ்யாவிலும், மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு தொடங்க உள்ளது.