• Fri. Mar 29th, 2024

கரீபியன் தீவில் படகு கவிழ்ந்து விபத்து…

Byகாயத்ரி

May 14, 2022

கரீபியன் தீவு நாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன்முறையும், மற்றொரு புறம் வறுமையும் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த இருநாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் சட்டவிரோதமான முறையில் கரீபியன் கடலில் படகுகளில் பயணம் மேற்கொண்டு அமெரிக்காவை சென்றடைகின்றனர்.

இதுபோல் ஆபத்தான பயணங்கள் பல்வேறு நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. இந்நிலையில் ஹைதி நாட்டை சேர்ந்த பல பேர் ஒரு படகில் கரீபியன் கடல் வழியே அமெரிக்கா நோக்கி புறப்பட்டனர்.
இவர்களுடைய படகு கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோ அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் படகிலிருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதற்கிடையே போர்ட்டோ ரிகோதீவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஹெலிகாப்டர் ஒன்று கடலில் படகு கவிழ்ந்து கிடப்பதை பார்த்தது. அதனை தொடர்ந்து இது பற்றி அமெரிக்க கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி கடலோர காவல்படையினர் மீட்பு படகுகளில் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

ஆனால் அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உட்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அதே நேரம் நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 31 பேரை மீட்பு குழுவினர் பாதுக்காப்பாக மீட்டனர். அதன்பின் அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனிடையே படகில் மொத்தம் எத்தனை பேர் பயணம் மேற்கொண்டனர் என்பது உறுதிசெய்யப்படாத சூழ்நிலையில், இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆகவே அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *