• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாஜக ஆளும் மாநிலங்களில் படிப்படியாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் – அமித்ஷா

ByA.Tamilselvan

Apr 24, 2022

பொது சிவில் சட்டம் பாஜக ஆளும் மாநிலங்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.மத்திய பாஜக அரசு அயோத்தியில் ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் நடைமுறைக்கு தடை, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை கொள்கையாக கொண்டுள்ளது.
மற்ற மூன்றும் அமலாக்கப்பட்ட்டுவிட்ட நிலையில்பொது சிவில் சட்டம் மட்டுமே அமல்படுத்தவில்லை. இச்சட்டத்தையும் விரைவில் அமலாக்க முயற்சிக்கப்படுகிறது.
கடந்த மார்ச்சில் முடிந்த உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலின்போது அங்கு பொது சிவில் சட்டம் அமலாக்கப்படும் என முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். அங்கு பாஜகவின் வெற்றிக்கு பிறகு தாமியே மீண்டும் முதல்வரான நிலையில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது, உத்தராகண்டை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டப்பேரவை மூலம் படிப்படியாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். ம.பி.யில் வரும் 2023-ல் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பாஜக 2019 தேர்தல் முதல் தனது அறிக்கையில் பொது சிவில் சட்ட அமலாக்கப்படும் என அறிவித்து வருகிறது .இந்தச்சூழலில் பாஜக ஆளும் முக்கிய மாநிலமான உ.பி.யில், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று கூறும்போது, “தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றிக்குப் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத், பொது சிவில் சட்டம் கொண்டு வரும் நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார். இந்த சட்டத்தை நாடு முழுவதிலும் அமலாக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக இதற்கு முந்தைய அரசுகள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முன்வரவில்லை. இந்த சட்டத்தை அனைவரும் ஏற்று வரவேற்க தயாராக வேண்டும்” என்றார்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்ஸிகளுக்கு அவர்களது தனிச்சட்டம் கடைபிடிக்க அனுமதி உள்ளது. இந்துக்கள், சீக்கியர் மற்றும் ஜெயின்களுக்கு இந்து சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் படிபடிப்படியாக பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் என அமித்ஷா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.