உடுப்பி ஸ்ரீPகிருஷ்ணர் மடத்தில் தான் பேசியது தேவையற்ற விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளதாகவும், எனவே தான் பேசியதை வாபஸ் பெறுவதாகவும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.
பெங்களூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் பல பேச்சுக்கள் சர்ச்சையாகி வரும் நிலையில், சமீபத்தில், உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் மடத்தில் 2 நாட்களுக்கு முன்பு அவர் பேசிய ஒரு பேச்சு புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பாரதத்தில் இந்து மத மீட்பு என்பது குறித்த தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேஜஸ்வி சூர்யா, தாய் மதத்தை விட்டுப் போனவர்களை மீண்டும் இந்து மதத்திற்கே நாம் கொண்டு வர வேண்டும். அதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். நடந்து விட்ட தவறுகளை சரி செய்ய அது ஒன்றே சரியான வழி.
சமூக பொருளாதார காரணங்களுக்காக யாரெல்லாம் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்களோ, அவர்கள் எல்லோரையும் மீண்டும் தாய் மதத்திற்கே கொண்டு வர வேண்டும். மொத்தமாக அவர்களை திரும்ப வர வைக்க வேண்டும் என்று பேசியிருந்தார் தேஜஸ்வி சூர்யா.
கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தேஜஸ்வி சூர்யா இப்படிப் பேசியது பரபரப்பைக் கிளப்பியது. சர்ச்சையும் வெடித்தது. இந்த நிலையில் தான் பேசியதை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளார் தேஜஸ்வி சூர்யா.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், 2 நாட்களுக்கு முன் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் பேசினேன். அப்போது நான் தெரிவித்த சில கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டிய சர்ச்சையை உருவாக்கியுள்ளன. எனவே நான் எனது பேச்சுக்களை திரும்பப் பெறுகிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.
சமீப காலமாக இந்து மதத்தின் பெயரில் வெளியிடப்படும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளன. இப்படித்தான் ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் எனப்படும் இந்து மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் முஸ்லீம்களைக் கொல்ல வேண்டும் என்று பேசியது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் எழுப்பியது. இது இப்போது சர்வதேச அளவில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் ஹரித்வார் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அது முடியாத நிலையில் தற்போது பெங்களூரைச் சேர்ந்த பாஜக இளம் எம்பி தேஜஸ்வி சூர்யா பேசியது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.