• Sat. Apr 20th, 2024

ஜி-20 சின்னத்தில் பா.ஜ.க. தேர்தல் சின்னமா? காங்கிரஸ் கண்டனம்

ஜி-20 சின்னத்தில் பா.ஜ.க. தேர்தல் சின்னத்தை சேர்த்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ள ஜி-20 அமைப்புக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி இந்தியா தலைமை ஏற்க இருக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ஜி-20 அமைப்பின் சின்னம், கருப்பொருள், இணையதளத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்த ஜி-20 அமைப்பின் சின்னத்தில், பா.ஜ.க.வின் தேர்தல் சின்னமான தாமரையை இடம் பெறச்செய்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதையொட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- 70 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கொடியை இந்தியாவின் தேசியக்கொடியாக ஆக்குகிற திட்டத்தை நேரு நிராகரித்தார். ஆனால் இப்போது ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பதையொட்டி வெளியிட்ட சின்னத்தில் பா.ஜ.க. தனது தேர்தல் சின்னத்தை (தாமரை) இடம் பெறச்செய்துள்ளது.
இது அதிர்ச்சி அளிக்கிற வேளையில், மோடியும், பா.ஜ.க.வும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் எந்த வாய்ப்பையும் இழந்து விட மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் என்று அவர் கூறி உள்ளார். அதே நேரத்தில் இதையொட்டி மத்திய அரசின் சார்பில், வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- ஜி-20 சின்னம், இந்தியாவின் தேசியக் கொடியின் துடிப்பான காவி, வெள்ளை, பச்சை மற்றும் நீல நிறங்களில் இருந்து உத்வேகம் பெறுகிறது. இது சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சியை பிரதிபலிக்கும் இந்தியாவின் தேசிய மலரான தாமரையுடன் பூமியை இணைக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஜி-20 உச்சி மாநாடு, வரும் 15, 16 தேதிகளில் இந்தோனேசியாவில் பாலியில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிற உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளை வழங்க உள்ளார். இது குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 12-ந் தேதி சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள இமாசலபிரதேச மாநிலத்தில் இருந்து தனித்துவமான கலை மற்றும் கைவினைப்பொருட்களை ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசுப்பொருட்களில் சம்பா ரூமல் கைக்குட்டைகள், காங்க்ரா மினியேச்சர் ஓவியங்கள், கின்னவுரி சால்வை, குலு சால்வை மற்றும் கனல் பித்தளை கலைப்பொருட்கள் போன்றவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *