• Fri. Mar 29th, 2024

குஜராத்தில் தொடர்ந்து 7 முறை வெற்றிபெற்று பாஜக புதிய சாதனை

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக மீண்டும் வென்றுள்ள நிலையில், அக்கட்சி தொடர்ச்சியாக 7வது முறை வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், இப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அத்துடன் சேர்ந்த இமாச்சல பிரதேச மாநிலச் சட்டசபை முடிவுகளும் வெளியாகி வருகிறது. இதில் இமாசல பிரதேசத்தில் பாஜகவால் வெல்ல முடியவில்லை என்ற போதிலும், குஜராத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
குஜராத்தில் ஆளும் மாநில அரசுக்கு எதிராக அதிருப்தி இருந்ததாகச் சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே விஜய் ரூபானி கடந்த ஆண்டு செப். மாதம் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பூபேந்திர படேல் முதல்வராக்கப்பட்டார். அவர் சுமார் ஓராண்டாக முதல்வராக இருந்தாலும் கூட, இன்னுமே ஆளும் மாநில பாஜக அரசு மீதான குஜராத் மக்களின் அதிருப்தி குறையவில்லை எனச் சொல்லப்பட்டது. இதனால் இந்தத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறுமா என்றெல்லாம் கூட கேட்டார்கள்.
அதிலும் குறிப்பாகத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு தான், அங்கு மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் நடந்த இந்தக் கோர விபத்தும் கூட குஜராத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அதுவும் இந்தத் தேர்தலில் துளியும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாகப் பால விபத்து நடந்த மோர்பில் தொகுதியில் கூட பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் தான் முன்னிலையில் உள்ளார். அவருக்கு இரண்டாம் இடத்தில் உள்ள காங்கிரஸின் படேல் ஜெயந்திலாலுக்கும் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.
இந்தத் தேர்தலை பாஜக தனது கவுரவ பிரச்சினையாகவே பார்த்தது. பிரதமர் மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமாகக் குஜராத் இருப்பதால், அங்கு நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இருந்தது. பிரதமர் மோடி தொடர்ச்சியாகப் பல முறை குஜராத்தில் தீவிர பிரசாரம் செய்தார். குறிப்பாக, இறுதிக் கட்டத்தில் அவர் மிகத் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தார். அதேபோல பல மூத்த பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் கூட குஜராத்தில் பிரசாரத்தைச் செய்தனர்.
இதற்கு இப்போது பாஜகவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அங்கு மொத்தம் 182 இடங்கள் உள்ள நிலையில், அதில் பாஜக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் 77 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியால் வெறும் 16 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஆம் ஆத்மி 5 இடங்களைப் பிடித்தது. பிற கட்சிகள் 3 இடங்களை பிடித்தது. கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் வென்றுள்ள பாஜக இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம் பாஜக மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது. குஜராத்தில் பாஜக 1998ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளது. அப்போது முதலில் கேசுபாய் படேல் முதல்வராக இருந்தார். அதன் பின்னர் தற்போதைய பிரதமர் மோடி சுமார் 12.5 ஆண்டுகள் தொடர்ச்சியாக குஜராத் முதல்வராக இருந்தார். அதன் பிறகு ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி, இப்போது பூபேந்திர படேல் என முதல்வர்கள் மாறிய போதிலும், இன்னுமே கூட பாஜகவின் கோட்டையாக குஜராத் இருந்து வருகிறது. இத்தனை முதல்வர்கள் மாற்றப்பட்ட பின்னரும், தொடர்ச்சியாக ஒரு கட்சி 7ஆவது முறையாக தேர்தலில் வென்று ஆட்சியை அமைப்பது இதுவே முதல்முறையாகும்.
இதன் மூலம் பாஜக அங்குக் கலக்கல் சாதனையைப் படைத்துள்ளது. அங்கு பாஜக தொடர்ச்சியாக 7ஆவது முறையாகத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 1998க்கு பிறகு அங்கு பாஜக தோல்வியைத் தழுவியதே இல்லை. இதன் மூலம் சிபிஎம் கட்சிக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தில் 7 தேர்தல்களில் வென்ற கட்சி என்ற மாபெரும் சாதனையை பாஜக படைக்கும். சிபிஎம் மேற்கு வங்கத்தில் 7 தேர்தல்களில் வென்று, 1977 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது பாஜகவுக்கு மிகப் பெரிய சாதனையாக இருக்கும்.
குஜராத்தில் கடந்த 2017 தேர்தலில் பாஜகவின் இடங்கள் சற்று குறைந்தன. 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், பாஜக பெரும்பான்மையைப் பெற்ற போதிலும், 99 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி பல தேர்தல்களுக்குப் பிறகு முதல்முறையாக 77 இடங்களில் வென்றன. இருப்பினும், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *