நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிவெடுப்பார் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப் பின்பு பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அனைத்து மாவட்டத்திலும் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களை அறிவிப்பார். ஜனவரி 31ஆம் தேதிக்குப் பிறகு வேட்புமனு தாக்கல் தொடங்கும்” என்று தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்கள் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாகக் கேள்வி எழுப்பினர்.
அப்போது “அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க முழு அதிகாரமும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி சுமுகமாகவோ, சுமுகம் இல்லாமல் இருப்பதாகவோ நான் சொல்லவில்லை என்று தெரிவித்த அவர், “வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி நாளை அல்லது நாளை மறுநாள் முடிவடையும் நிலையில் அதற்குள்ளாகவே மாநில தலைவர் கூட்டணி சம்பந்தமாகத் தெரிவிப்பார்.
இந்த கூட்டத்தை நாங்கள் திருச்சியில் நடத்துவதற்காகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் 100 பேருக்கு மேல் கூட்டத்தைக் கூட்ட கூடாது என்பதற்காகத்தான் இங்கு நடத்தினோம். இதனைக் காணொளி காட்சி மூலமாக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். அதனால்தான் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ இந்த கூட்டத்தில் வந்து பங்கேற்க முடியவில்லை” என்றும் தெரிவித்தார்.மேலும் பாஜக தனித்துப் போட்டியிடுவதற்கு இப்போதைக்கு அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.