• Fri. Apr 19th, 2024

மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!..

கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி இடைத்தேர்தலில் தன்னுடைய சொந்த பகுதியான பவானிபூரில் போட்டி இடுகிறார். இதற்காக பவானிபூர் எம்எல்ஏவும், வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார்.

பவானிபூர் தொகுதியுடன் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. ஆனால், பவானிபூர் தொகுதியில் 53.32 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. மற்ற இரண்டு தொகுதிகளிலும் 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *