
இயக்குனர் பாரதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனராகவும், தற்போது நடிகராகவும் வலம் வருபவர் பாரதிராஜா(81) . இவர் கடந்த 24ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக சென்னை, தி.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் டாக்டர்களின் ஆலோசனைப்படி 26ம் தேதி சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். முன்னதாக பாரதிராஜா உடல்நிலை நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மெல்ல தேறி வருகிறார் என்றும் அவரது உதவியாளர் சுரேஷ் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு வாரத்திற்குள் வீடு திரும்புவார் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் தான் நலம் பெற்று வருவதாகவும், விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் என்றும் பாரதிராஜா தெரிவித்திருந்தார். அதேபோல் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ வல்லுநர்களால் கண்காணிப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் உடல்நிலை தேறி வருவதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவிற்கு மாற்றப்பட்டதாகவும், இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
