• Tue. Apr 23rd, 2024

கலங்கரை விளக்கம் : குமரி கார்மல் பள்ளியின் அகவை நூறு..!

இந்தியாவில் ஜாதி, மத பேதங்களைக் கடந்து தென் இந்திய திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்களால் தொடங்கப்பட்டு, அனைவரும் கல்வி கற்கலாம் என்ற நோக்கில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்து, இன்றும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் குமரி கார்மல் பள்ளி இன்று நூற்றாண்டைத் தொட்டு நிற்பதுதான் ஹைலைட்டே!
திருவிதாங்கூர் மன்னராட்சியின் பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அனைவரும் நிலம் வாங்கலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது. 1795-ல் தான். அதுவரை உயர் சாதியினர் மட்டுமே நிலம் வாங்கலாம் என்ற சட்டம் அகற்றப்பட்டது என கார்மல் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது..,
குமரி மாவட்டம் கல்வி மற்றும் மருத்துவ துறையில் சிறந்து விளங்க காரணமாக இருந்தவர்கள், கிறிஸ்தவ மிஷனரிகள் மேற்கொண்ட தன்னலமற்ற மனித நேயமே காரணம்.    
குமரி மாவட்டம்,  மைலாடியில் 1806-ம் ஆண்டு முதல் பள்ளிக்கூடம்  எல் எம் எஸ் என்ற பெயரில், இன்றைய தென் இந்திய திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்களால் தொடங்கப்பட்டது. இன்று நூற்றாண்டை கொண்டாடும் நம் கார்மல்பள்ளி, கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்களால் 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஜாதி மதத்தால் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த காலத்தில், ஜாதி, மத பேதமின்றி எல்லோரும் வந்து கல்வி கற்கலாம் என அழைத்து கல்வி கற்றுக் கொடுத்த பள்ளி கார்மல் மேல்நிலை பள்ளி. இன்று இந்த பள்ளி நூற்றாண்டை  நிறைவு செய்கிறது.. இன்றும் மாணவர்களுக்கு இலவசமாக தரமான கல்வி கற்று கொடுத்து வருகிறது.
 கார்மல் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்பணி மரியபாஸ்ட்டின் என்னிடம் சொன்ன ஒரு தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கார்மல் பள்ளியில் 15 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பயிலும் மாணவர்களுக்கு காலை இலவச உணவு வழங்கி வருகின்றனர். இந்தியாவிலே இல்லாத முதல் திட்டமாக தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச காலை உணவை நம் முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் கல்வியில் முன்னோடி மாவட்டமான குமரியில், நாகர்கோவில் கார்மல் பள்ளி தான்  முதல் முன்னோடி என்பது கார்மல் பள்ளிக்கே ஆன தனி சிறப்பு என்பதில் தமிழகமே பெருமை கொள்ளலாம் என தெரிவித்த சபாநாயகர் அடுத்தடுத்து சொன்னதுதான் மிகவும் ஆச்சரியமான  தகவல்.
இந்தியாவில் கல்வி வியாபாரம் எத்தகைய கொள்ளை லாபம் பொறும் தொழிலாக இருந்து வருகிறது என்பதற்கு, சபாநாயகர் சொன்ன தகவல்.

மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ  பள்ளியில் படிப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.1லட்சம் கட்டணம் செலுத்துகிறார்கள். பெற்றோர் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வங்கியில் ரெக்கரிங்  டெப்பாசிட் என ஒரு திட்டம் உள்ளது. அதில் சேர்த்து ஆண்டுக்கு  ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் 15 ஆண்டுக்கு பின் 58 லட்சம் ரூபாய் திரும்ப கிடைக்கும்.    கார்மல் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் தனது பெற்றோருக்கு ரூ.58 லட்சத்தை மிச்சப்படுத்தி கொடுக்கிறான் என சொல்லி முடிக்கும் முன்னரே விழா திடலில் கூடியிருந்த மாணவர்கள் எழுப்பிய கைதட்டல் ஒலி அடங்க சில நொடிகள் ஆனது. சபாநாயகர் அப்பாவு பேச்சின் ஹைலைட் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே எந்த சாதிய பாகுபாடுகள் இல்லாது கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த  பள்ளியில் படித்து வெளியே சென்றவர்களில் 85 சதவீதம் பேர் பிற மதங்களை சேர்ந்தவர்கள். கார்மல் பள்ளி நிர்வாகம் மாணவர்களை மதத்தை, ஜாதியை வைத்து நாட்டை துண்டாட வேண்டும் என நினைப்பவர்கள் வாழும் இந்த காலத்தில், பாகுபாடின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த பள்ளியில் பணியாற்றும் அருட்தந்தையர்களை பாராட்டுகிறேன் என சபாநாயகர் அவரது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கோட்டார் மறைமாவட்டம் ஆயரும், கார்மல் பள்ளியின் முன்னாள் மாணவருமான  மேதகு நசரேன் சூசை..,
இந்த பள்ளிக்கு முதல் மூலக் கல்லை எடுத்து வைத்து இந்த கல்வி கோவிலுக்கு காரணமான அந்த முதல் ஆயர் அன்றைய கொல்லம் மறை மாவட்டத்தின் ஆயராக இருந்த மேதகு ஆயர் பென்சிகர் என தெரிவித்ததுடன், அன்றைய  ஆயரது நிழல் படத்தையும் தந்து உதவினார்.
கார்மல் பள்ளி தாழ்வாரம் இன்னும் இந்த மக்கள் சமுகத்திற்கு மத வேற்றுமை பார்க்காது உருவாக்க போகும் கல்வியாளர்களை நாளைய சரித்திரம் பதிவு செய்ய காத்திருக்கிறது என்பதின் அடையாளத்தை வெளிப்படுத்தியது.
கார்மல் பள்ளியின் சீருடையுடன் கூட்டம் கூட்டமாக கலைந்து செல்லும் மாணவ சமுகத்தில் மத்தியில் மத பேதமின்றிய நட்பு மட்டுமே இளையோடுவதை காண முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *