நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் எதிர் வரும் 14ம் தேதி துவங்க உள்ள நிலையில் தமிழகம் விருந்தினர் மாளிகை உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள பால்சம் மலர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது…

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட பல லட்சம் சுற்றுலா பயணிகள் உள் மற்றும் வெளி மாவட்ட, மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வருகை புரிகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தமிழகம் மாளிகை பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தாவரவியல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகையில் உள்ள பூங்கா ஆகியவைகளில் நாற்று நடவு பணிகள் நிறைவடைந்ததுள்ளது. இதனால், அனைத்து பாத்திகளிலும் மலர் செடிகள் மலர்ந்து காட்சியளிக்கிறது. தமிழகம் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் இயற்கையை வர்ணணை செய்யும் விதமாக பால்சம் மலர்கள் பூத்து குலுங்குகிறது. தமிழகம் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் தற்போது பல வண்ணங்களில் பால்சம் மலர்கள் உட்பட பல்வேறு மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு காட்சி அளித்து மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. தமிழகம் மாளிகை செல்லும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.