


நெய்க்காரப்பட்டி பெருமாள்புதூர் பகுதிகளில் தரமற்ற தார் சாலைகள், அமைக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் கவுன்சிலர் தங்கராசு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி பெருமாள் புதூர் பிரதான சாலை பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதிதாக தார் சாலைகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெய்க்காரப்பட்டியில் இருந்து பெருமாள் புதூர் செல்லும் வரை நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள நெய்க்காரப்பட்டி பெருமாள்புதுார் சாலையினை, 4.80 கி.மீ நீளமுள்ள சாலையில் ரூ. 275 இலட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,
இந்த சாலைகள் அமைக்க குறைந்த அளவு தார் அதிக அளவிலான கருப்பு நிற ஆயிலை கொண்டு சாலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்ட பெருமாள் புதூர் பத்தாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆகியோர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். தார் சாலையில் உள்ள ஜல்லி, கற்கள் அனைத்தும் உதிர்ந்து வரும் வீடியோ காட்சிகளையும் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், புதிய சாலை அமைக்கும்போது பழைய சாலையை அகற்றிவிட்டு சாலை அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் பழைய சாலையை அகற்றாமலேயே புதிய சாலையை போடுகீறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
புதிய சாலை அமைத்து சாலை பெயர்ந்து வருவதால் தங்களுக்கு சாலையே தேவை இல்லை என வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமா பரவியதை அடுத்து அந்தப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பிரசன்ன வெங்கடேசன் , கோட்டப்பொறியாளர் (நெ),தரக்கட்டுப்பாடு மதுரை கோட்டம், சாலையை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் சாலையை உடனடியாக சரி உத்தரவிட்டனர்.

