


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் பிறந்து 38 நாட்கள் ஆன கைக் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜா – சித்ரா தம்பதியினருக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்னர் 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்து 38 நாட்களான கைக் குழந்தையை தூங்க வைத்துவிட்டு மற்ற இரு குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர வெளியே சென்ற தாய் சித்ரா, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி குழந்தையை தேடி பார்த்தபோது அருகில் உள்ள வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் கைக் குழந்தை சடலமாக மிதந்துள்ளது. இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு அங்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். தண்ணீர் தொட்டிக்குள் கைக் குழந்தையை வீசி கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 38 நாட்கள் ஆன கைக் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

