பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் மதுரை- காசி இடையே ரயில் இயக்க விண்ணப்பம் வந்துள்ளது – அவை பரீசீலனையில் உள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா மதுரை தேனி அகல ரயில் பாதையில் ஆய்வு செய்தார். மதுரையிலிருந்து சிறப்பு ஆய்வு ரயிலில் மதுரையிலிருந்து மாலை 3 மணிக்கு தேனி சென்று ஆய்வு நடத்தினார்.
அதனைத்தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறை, சுங்குடி சேலை விற்பனை மையம், பயணிகள் அமரும் இடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தனிச்செயலர் செந்தமிழ்ச்செல்வன், ரயில் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில்;
தேனி போடி இடையிலான அகல ரயில் பாதை திட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் நிறைவடையும், தேனி ரயில் பாதை ரம்மியமான இயற்கை அழகு நிறைந்ததாக உள்ளது.பாம்பன் புதிய மேம்பால பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.மேலும் பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் மதுரை- காசி இடையிலான திட்டத்திற்கு ஒரு நிறுவனத்திடம் இருந்து விண்ணப்பம் வந்துள்ளது. அது பரிசீலனையில் உள்ளது.காரைக்குடி திருவாரூர் இடையே கேட் கீப்பர் பணிகளுக்கு முன்னாள் இராணுவத்தினரை பணியமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் நிறைவடைந்தும் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் சென்னை மதுரை இடையே கூடுதல் ரயில்கள் இயக்க தேவைப்பட்டால் அது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.