நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் போதைப்பொருளின் பாவனையை தடுத்து நிறுத்துவதோடு அவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில், பல்வேறு விதமாக சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை அருகே உள்ள யானைமலை ஒத்தக்கடையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
போதை ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிட்டு நம்ம ஊரு ஒத்தக்கடை மற்றும் யான்எக்ஸ் உள் விளையாட்டு அரங்கம் (YaanXturf) இணைந்து நடத்தும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா – 2025 கடந்த வியாழக்கிழமை (ஜன.16) நடைபெற்றது.
இதில், ஒத்தக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் அன்புகோட்டை, 11 ஸ்டார், ஐசிசி ஒத்தக்கடை, ரெட் ரோஸ், மலைசாமிபுரம் நண்பர்கள், 5 ஸ்டார் பாய்ஸ், பள்ளிவாசல் பசங்க, அண்ணாமலை நண்பர்கள் மற்றும் திருமோகூர் அணி என ஒன்பது அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இப்போட்டியில் கிராமத் தலைவர் அ.பா.ரகுபதி தலைமை தாங்கினார். திருமோகூர் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பாலாண்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதில், பேசிய அண்ணாமலை “உங்களது சிந்தனை முழுக்க ஒருசேர இருந்தாதலே கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு பிறகு ஒன்பது அணிகளாக 63 வீரர்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விளையாட வைத்துள்ளார்கள். இனி வருகின்ற தலைமுறைக்கு போதையினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் விதமாக இப்போட்டி நடத்தப்படும்” என்று கூறினார். இப்போட்டியில், பிரசாந்த் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேலும், சிறப்பு செய்த விருந்தினர்களுக்கும், பொதுமக்களுக்கும் போட்டியில் நன்றி தெரிவித்தனர்.