
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் ஹரிராம், பாலசுப்ரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டாசு ஆலைகளில் உரிமம் பெற்ற பட்டாசுகளை மட்டும் தயாரிக்க வேண்டும், இரவு நேரங்களில் பட்டாசு தயாரிப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. அதனால் இரவு நேரங்களில் பட்டாசு உற்பத்தி செய்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். பட்டாசு ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை உள்பட அரசு அறிவித்துள்ள விடுமுறை தினங்களில் சிவகாசி தொழிலக பாதுகாப்புத் துறையின் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிக்க கூடாது. மூடி கிடக்கும் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து திருட்டுகள் நடைபெற்று வருகின்றன. ஆகையால் பட்டாசு ஆலை அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கூறப்பட்டது. முகாமில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
