

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் இடப் பிரச்சினை காரணமாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், மதுரையில் உள்ள முடுவார்பட்டி என்கிற ஊரைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு வயது 65 இவர் ஒரு கூலித்தொழிலாளி. தனது விவசாய நிலத்தை ஒருவர் விவசாய பணி மேற்கொள்ள விடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடமும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த முதியவர் நாராயணன் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார் உடனடியாக அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் முதியவரை தடுத்து அவருக்கு முதல் உதவி வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணைக்காக முதியவரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். கொரோனா தொற்று காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நேரடியாக நடத்தப்படுவது இல்லை. இந்த நிலையில் முதியவர் ஒருவர் திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
