• Fri. Mar 29th, 2024

அட்ராசிட்டி அன்னபூரணியின் அடுத்த சவால்..

அன்னபூரணி தரிசன நிகழ்ச்சிக்கு ஆசிரம நிர்வாகம் தடை விதித்த நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்தியே காட்டுவேன் என அன்னபூரணி சவால் விடுத்துள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அடுத்தவர் கணவருடன் குடும்பம் நடத்துவதாக புகாருக்குள்ளானவர் அன்னபூரணி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் மிகவும் பேமஸ் ஆனார்.

ஜனவரி மாதம் 1 ஆம்தேதி புத்தாண்டு பிறப்பையொட்டி தரிசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி பெறாததால் நிகழ்ச்சியை நடத்த கூடாது என போலீஸ் தடைவிதித்தது.

இதையடுத்து அவரது பழைய கதைகளை தோண்டி நெட்டிசன்கள் பேசி வந்த நிலையில் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தோன்றி சொல்வதெல்லாம் உண்மை குறித்தும் இறந்த கணவர் அரசு குறித்தும் பேசினார். மேலும் இயற்கை ஒலி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்னபூரணியும் அவரது கணவரும் ஞானம் பெற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த உலகை காக்கவே தானும் அரசுவும் உடலால் ஒன்று சேர்ந்தோம். அவர் இறந்தவுடன் நாங்கள் ஓருயிர் ஆனோம். அவர் பெற்ற ஞானமும் தனக்கு கிடைத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஓவர் நைட்டில் பேமஸான அன்னபூரணியின் செயல்பாடுகள், ஸ்பிரிங்கில் உட்கார்ந்தது போல் ஆடி கொண்டே அருள்வாக்கு கூறுவது குறித்தெல்லாம் கேலி கிண்டல்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து தனது யூடியூப் சேனல், பேஸ்புக்கில் சொற்பொழிவை ஆற்றி வந்தார். பின்னர் கொஞ்ச நாட்கள் ஆள் அட்ரஸ்ஸே இல்லாமல் இருந்த நிலையில் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் அம்மா எனர்ஜி தர்ஷன் எனும் நிகழ்ச்சி ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறுகிறது. அது அருள்வாக்கு நிகழ்ச்சி என்றும் அன்னபூரணி தெரிவித்திருந்தார்.

இந்த முறை டிமாண்ட் அதிகம் என்பதால் அருள்வாக்கு பெற ஒருவருக்கு ரூ 700 கட்டணம் வசூலிக்கப்படும் என கூறி முன்பதிவும் நடந்தது (குறிப்பு: தனியார் டிவி நிகழ்ச்சியில் தான் ஒரு போதும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு காசு வசூல் செய்ய மாட்டேன் என உறுதியளித்திருந்தார் அன்னபூரணி). இந்த நிகழ்ச்சி சென்னை சுதானந்த ஆசிரமத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை இயற்கை ஒளி பவுன்டேஷன் செய்திருந்தது. இந்த நிலையில் அன்னபூரணி நிகழ்ச்சி நடைபெறவிருந்த சுதானந்த் ஆசிரமத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதாக தெரிகிறது. அன்னபூரணி குறித்து அந்த ஆசிரம நிர்வாகிகளுக்கு ரகசிய தகவல்கள் அனுப்பப்பட்டன.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியை சுதானந்த ஆசிரம நிர்வாகம் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. ஆயினும் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட நாளில் தர்ஷன் நிகழ்ச்சியை நடத்தியே தீருவேன் என்றும் இடம் மட்டும் முன்பதிவு செய்தவர்களுக்கு ரகசியமாக குறுந்தகவல் அனுப்பப்படும் என்றும் வீடியோவில் சவால் விடும் வகையில் அன்னபூரணி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சமூக வலைதளத்தில் என்னை பற்றி தவறான செய்தியை பரப்பி ஆன்மீக நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்துவிட்டார்கள்.

எனவே ஆன்மிக நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாத சிலர் இப்படி செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தியானம், ஆன்மீக உரைதான் நிகழ்த்த போகிறேன். ஆனால் நான் அருள் வாக்கு சொல்வதாக தவறாக பரப்பி வருகிறார்கள். எல்லாரும் ஆன்மிக நிகழ்ச்சியை நடத்தும் போது என்னை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறீர்கள்?

என்னை டார்கெட் செய்வதாலோ என் மீது அவதூறு பரப்புவதாலோ என்னுடைய ஆன்மிக நிகழ்ச்சி நின்றுவிடாது. தொடர்ந்து தர்ஷன் நிகழ்ச்சியை நடத்துவேன். ஆன்மீக தீட்சையும் கொடுப்பேன். இதை யாராலும் தடுக்க முடியாது. யாருக்காகவும் இந்த நிகழ்ச்சியை நிறுத்த மாட்டேன் என வீடியோவில் அன்னபூரணி கொந்தளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *