இந்தியாவிற்காக இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு மிக எளிமையான முறையில் திருமணம் நேற்று நடந்துள்ளது.
தனது திருமண புகைப்படங்களை நீரஜ் நோப்ரா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி. அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சியாக எப்போதும்” என்று நீரஜ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார்.
நீரஜ் சோப்ராவை கரம்பிடித்திருக்கும் ஹிமானி மோர் ஒரு டென்னிஸ் வீராங்கனை. அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மேலும் பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர டென்னிஸ் பயிற்சியாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.