தேனி மாவட்டம் கம்பத்தில், கம்பம் நகர வடக்கு மற்றும் தெற்கு திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கம்பம் காந்தி சிலையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு, தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தி, கலைஞரின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், 1971-ல் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், 1972-ல் இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம், 1973-ல் கை ரிக்ஷாக்களை அகற்றி, இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம், 1974-ல் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம் என்ற வரிசையில் 1975 ஆம் ஆண்டில் கைம்பெண்களுக்கு உதவும் மறுவாழ்வுத் திட்டம் ஆதரவற்ற சிறார்களின் நல்வாழ்வுக்கான கருணை இல்லம் திட்டம் 3 கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார்.
திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கம்பம் இரா பாண்டியன், கலைஞரின் வாழ்க்கை போராட்டங்கள் குறித்து பேசினார். இதை அடுத்து நகரச் செயலாளர் வடக்கு வீரபாண்டியன், தெற்கு பால்பாண்டி ராஜா தலைமையில் கட்சியினர் பொதுமக்களுக்கு பொங்கல், இனிப்பு வழங்கினர்.

இதைத் தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கம்பம் வ உ சி திடலில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை நகராட்சி ஆணையாளர் உமா சங்கர், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ் முன்னிலையில் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நகரச் செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா தலைமையில் கம்பம் வள்ளலார் மடத்தில் ஏழைகளுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள், அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.