• Sun. Jun 4th, 2023

அரவக்குறிச்சி டு கோவை பார்முலா… தேசிய கட்சிகள் அரண்ட தமிழ்நாடு மாடல்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த இமாலய வெற்றிய திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். வெற்றி பெற்ற பலரும் திமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியை திமுகவினரே எதிர்பாக்கவில்லை.ஆனாலும் தற்போது அனைவரது கேள்வியுமே கோவையை திமுக கைப்பற்றியது தான்.

2021 தேர்தலின் போது அதிமுக தான் கோவை முழுவதுமாக கைப்பற்றியது. அப்படி லோக்கலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செல்வாக்கு பெற்றிருக்கும் போது, எப்படி உள்ளாட்சி தேர்தலில் கோட்டைவிட்டார். கோவை மக்கள் அவ்வளவு எளிதில் திமுகவை திராவிடத்தை ஏற்றுக்கொண்டார்களா?, குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை , நகைக்கடன் தள்ளுபடி , பொங்கல் பரிசு குளறுபடி என பல அதிருப்திகள் கோவையில் எடுபடவில்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இப்படி இவ்வளவு அதிருப்திகள் இருந்தும் கோவையில் திமுக சொல்லி அடித்தது போல மொத்தத்தையும் வாரி சுருட்டியுள்ளது. இதுகுறித்து விரிவாக அலசி ஆராய்ந்து பார்ப்போம்.
கொங்கு ஆப்ரேஷன் என்று திட்டமிடப்பட்டு அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜியை நியமனம் செய்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின். திமுகவில் மூத்த பெரும் தலைவர்கள் இருக்கும் போது ஏன் இந்த ஆபரேஷன் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. மிக சாதாரணமான காரணம் செந்தில்பாலாஜி தான் எந்த கட்சியில் இருக்கிறாரோ அந்த கட்சிக்கு உண்மையான விசுவாசி. இதனை ஜெயலலிதா இருந்த போது பலமுறை நிரூபித்து உள்ளார். அது மட்டுமல்ல தேர்தலின் வெற்றிக்காக எப்படியாப்பட்ட உத்தியாக இருந்தாலும் அதனை யோசிக்காமல் செய்யக்கூடிய நபர். இதனால் தான் திமுகவின் குட்டி கலைஞர் என்று தொண்டர்களால் புகழப்படும் உதயநிதி ஸ்டாலின் , சபரீசன் மேற்பார்வையில் கோவை கோட்டையை கைப்பற்ற திமுகவின் போர் தளபதியாக செந்தில்பாலாஜி நியமிக்கபடுகிறார்.

சரி அப்படி என்ன பார்முலா தான் கோவையில் எடுபட்டது என்று கேட்கலாம்.ஆம் , அதை சொன்னால் தலை சுற்றி கீழே விழுந்து விடுவீர்கள். அந்த அளவுக்கு செந்தில்பாலாஜி டீம் கோவையில் புகுந்து விளையாடி உள்ளனர். கோவை பார்முலாவிற்கு முன் இந்த பார்முலா டெக்னிக் எங்கிருந்து வந்தது என்று ஒரு சின்ன ரீகேப் பார்ப்போம்.
2009 ம் ஆண்டு மதுரை திருமங்கலம் தொகுதி இடைதேர்தலின் போது வெற்றி பெறுவதற்காக அன்றைய திமுகவில் கர்ணன் என்று அறியப்பட்ட மு.க.அழகிரி தலைமையில் வீடு வீடாக 1000 முதல் 5000 விடியற்காலையில் பண பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த டெக்னிக் தான் பின்னாளில் திருமங்கலம் பார்முலா என்று உருவாகியது.

இதனை மிஞ்சும் அளவுக்கு ஒரு பார்முலா உருவானது. அது தான் அரவக்குறிச்சி பார்முலா. ஆம் 2016 ம் ஆண்டு அதிமுக சார்பில் செந்தில்பாலாஜி , திமுக சார்பில் கேசி பழனிச்சாமி போட்டியிட்டனர். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வாரி வழங்கினர். அதிகபட்ச தொகையாக ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் வழங்கப்பட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். பண விநியோகம் தெரியக்கூடாது என்று ஆம்புலன்ஸ் மூலம் பணத்தை விநியோகம் செய்தனர். மத்திய அரசு வாகனம் என்று ஸ்டிக்கர் ஒட்டபட்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது கட்டுகட்டாக பணம் சிக்கியது. அப்போது தான் அன்புநாதன் என்பவர் இதற்குள் வருகிறார். அவரது குடோனில் சோதனை நடக்கிறது,ஆனால் வெறும் பத்து லட்சத்தை மட்டும் கைப்பற்றினர். ஆனால் செந்தில்பாலாஜியும் கே சி பழனிசாமியும் விடுவதாய் இல்லை. போட்டி போட்டுகொண்டு ஆயிரம் ஆயிரமாக பணத்தை உயர்த்தி வாரி வழங்கினர்.

ஒரு கட்டத்திற்கு மேல் தேர்தல் ஆணையமே தலையிட்டு தேர்தலை ரத்து செய்தது. பிறகு 2019ம் ஆண்டு இடைத்தேர்தலின் போது மீண்டும் திமுக இணைந்து கொண்டு செந்தில்பாலாஜி அரவகுறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த முறையும் பணபட்டுவாடா செழிப்பாக தான் இருந்தது. இடைதேர்தல் வந்தால் செழிப்பாக இருக்கலாம் என்று பல தொகுதி மக்கள் கடவுளை வேண்டும் அளவிற்கு அரவகுறிச்சியில் பணம் விளையாடியது. இந்த திட்டத்தை கரூரில் அமல்படுத்தி மாவட்டத்தை கையில் எடுத்தார் செந்தில்பாலாஜி.

இப்போது ஓர் அளவிற்கு புரிந்து இருக்கும் செந்தில்பாலாஜி கோவை பொருப்பாளராக நியமிக்கபட்டதன் நோக்கம். இது வெறும் டிரைலர் தான் இனிமேல் தான் சுவாரஸ்யமான செய்தியே இருக்கிறது. கோவையில் ஒரு மாநகராட்சி (100 வார்டுகள்), ஏழு நகராட்சி 33 பேரூராட்சிகள் உள்ளன. இதில் கோவை திமுக அடிக்கடி உள்ளடி வேலைகள் நிகழ்வது சாதரணம், அதனால் முதலில் கோவை திமுகவினர் அழைத்து பேசிய செந்தில்பாலாஜி அனைவரையும் ஆப் செய்தார். கரூர் திமுகவில் இருந்து 1500 பேரை கோவையில் இறக்கினார். கோவையை பொறுத்தமட்டில் எம்ஜி ஆர்நினைவு நாள் ஜெயலலிதா பிறந்தநாள் போன்ற நாட்களில் அதிமுக சார்பில் குறிப்பாக எஸ் பி வேலுமணி சார்பில் சில்வர் குடம் , பட்டுசேலை , ஹாட்பாக்ஸ் என பரிசு பொருட்கள் கொடுப்பது வாடிக்கையானது தான். ஆனால் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்ட பிறகு இவர்களின் திட்டம் என்னவென்று தெரியாமல் தடுமாறியதால் வழக்கம் போல பரிசு பொருட்களை கொடுத்துள்ளனர்.

இதில் தான் செந்தில்பாலாஜி வைத்த முதல் ட்விஸ்ட் மொத்தம் நூறு வார்டுகள் ஒரு வார்டுக்கு 60 லட்சம் செலவு செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால் கரூர் டீம் களத்தில் இறங்கியதால் வார்டுக்கு ஒரு கோடி ரூபாய் என பட்ஜெட் எகிறியது. இரண்டு திராவிட கட்சிகளும் ஹட்பாக்ஸ் விநியோகம் செய்ய தொடங்கினர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பிடிபட்ட ஹாட்பாக்ஸ் மட்டும் மூன்று லாரி கொள்ளளவு என்றால் இந்த இரண்டு கட்சியினரும் எவ்வளவு ஆர்டர் செய்திருப்பார்கள் என்று நினைத்து பாருங்கள். ஹாட்பாக்ஸ் உடன் நிற்கவில்லை பெண் ஓட்டுகளை கவர 300 கிலோ கொலுசினை திமுக டீம் ஆர்டர் செய்து விநியோகம் செய்தது. அதிமுகவும் அதே போல ஆர்டர் செய்து விநியோகம் செய்தது.ஆனால் இவர்கள் கொடுத்த கொலுசுகள் தரமில்லை என்று மக்கள் சண்டை வேற போட்டார்கலாம்.
சரி பணபட்டுவாடவிற்கு வருவோம் கோவையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஓட்டுக்கு 1000 என்ற கணக்கில் பணம் வழங்கப்பட்டது.அதே போல செல்வாக்கான நபர்கள் போட்டியிட்டால் ஒரு ஓட்டிற்கு 5ஆயிரம் ரூபாய் வரைக்கும் வழங்கப்பட்டது. அதிலும் இன்னும் சிறப்பாக கவனிக்கப்பட்ட வார்டு என்றால் வடவள்ளி 38 வது வார்டு தான். காரணம் இந்த வார்டில் தான் ஒரு ஓட்டிற்கு 40 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர்.

அதிமுக சார்பில் எஸ்.பி வேலுமணி ஆதரவாளர் சந்திர சேகரின் மனைவி சர்மிளா போட்டியிட்டுள்ளார்.திமுக சார்பில் சண்முக சுந்திரத்தின் மனைவி அமிர்தவல்லி போட்டியிட்டுள்ளார். இருவருமே உறவினர்கள் அது மட்டுமின்றி இருவரும் அந்த அந்த கட்சியில் மேயர் வேட்பாளர் லிஸ்டில் உள்ளவர்கள் அதனால் கவுரவ பிரச்சனையாக வெற்றி பெற்றாக வேண்டும் என்று மாறி மாறி பணத்தை வழங்கி உள்ளனர்.

திமுக 2000 பணம் ஹாட்பாக்ஸ் , பட்டுசேலை , வெள்ளி கொலுசு கொடுக்க கொடுக்க , அதிமுக 3000 பணம் 10 கிராம் வெள்ளி நாணயம் கொடுத்துள்ளனர். பிறகு ஆளுக்கு இரண்டாயிரம் இரண்டாயிரம் வழங்கியுள்ளனர். இப்படியே 10 ஆயிரத்தை தாண்டியது.ஆனாலும் விட்டபாடில்லை தேர்தலுக்கு முந்தைய நாள் திமுகவினர் 10 ஆயிரத்திற்கு டிஜிட்டல் டோக்கன் வழங்கியுள்ளனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் 20 ஆயிரம் மதிப்பிலான டோக்கனை வழங்கியுள்ளனர்.வடவள்ளி 38வது வார்டு மக்கள் அடித்தது பம்பர் பரிசு என்று வாரி சுருட்டி உள்ளனர்.

இது போக மற்ற வார்டுகளில் முக்கிய செல்வந்தர்களாக இருந்தால் ஹாட்பாக்ஸ் இட்லி குக்கர் பட்டுசேலை மூக்குத்தி என புது புது ஐட்டங்களை இறக்கியது.
கோவை நகருக்குள் இப்படி என்றால் புறநகர் இவர்களை விட டிசைன் டிசைனாக யோசித்து வைத்துள்ளனர். பொள்ளாச்சியிலுள்ள பல வார்டுகளில் இரண்டு மாத மளிகை பொருட்களை திமுகவினர் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி வெற்றி பெற வைத்தால் ஆறு மாத கேபிள் பில் , டி.டி.எச், மொபைல் ரீசார்ஜ் கட்டணம் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இதற்கும் ஒரு படி மேலே சென்று வெள்ளித்தட்டில் வெற்றிலை பாக்கு பழங்களை வைத்து எனக்கு வாக்களித்தால் எல் இ டி டிவி தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தால் வாக்காளர்கள் திக்குமுக்காடி போனார்கள்.
சரி இப்படி பணத்தை மொத்தமாக கையில் வைத்து விநியோகம் செய்திருந்தால் மாட்டிக்கொள்ள மாட்டார்களா ?என்ற நீங்கள் கேட்காலாம். ஏற்கனவே அரவக்குறிச்சி தேர்தலில்ஆம்புலன்சில் பணம் கொண்டு சென்ற போது சிக்கியதை நினைத்து பார்த்த செந்தில்பாலாஜி ,இன்னொரு டெக்னிக் யோசித்தார்.

பணத்தை வங்கி கணக்கில் போட்டுவிட்டு ஏடிஎம் கார்டை திமுகவினரிடம் கொடுத்து பணத்தைஏடிஎம் ல் எடுத்து விநியோகம் செய்துள்ளனர். முடிந்தவரை பலருக்கும் கூகுள்பே மூலமாகவும் பணம் கைமாற்றப்ட்டுள்ளது. ஹாட்பாக்ஸ் , கொலுசு பட்டுசேலையை கூட கொரியர் டெலிவரி செய்வது போல சந்தேகம் வராமல் செய்துள்ளனர்.

இவை அனைத்தும் கண்கூட பார்த்து அரண்டவர்கள் தான் தேர்தலை நிறுத்த கூறியது.தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி வழக்கு தொடுத்தது. அதிமுக சார்பில் எஸ்.பி வேலுமணி இறங்கி பண பட்டுவாடா செய்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் குண்டுகட்டாக அவரை போலீஸ் தூக்கி அப்புறபடுத்தியது. தமிழக அரசியலில் தனித்து போட்டியிட்டு இவர்கள் வாரி வழங்குவதை கண்டு அரண்ட தேசிய கட்சிகள் தங்கள் பங்கிற்கும் நூறு, இருநூறு வழங்கி உள்ளனர்.

கோவையை எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற நெருக்கடி காரணமாக தான் தொடர்ந்து அங்கு தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.மொத்தம் 30 லட்சம் வாக்காளர்கள் அதில் 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள், அதிலும் 18 லட்சம் பேருக்கு பல நூறு கோடிகள் பண பட்டுவாடா படுஜோராக நடைபெற்றுள்ளது.

தேர்தலின் வெற்றிக்கு பிறகு இப்படி பட்ட தகவல்கள் இன்னும் வெளிவந்து கொண்டு தான் இருக்கும். திராவிட மாடல் மோடி மாடல் என்று போட்டி போட்டுக்கொண்டிருந்த போது இப்படி ஒரு மாடலை பார்த்து தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சியே அரண்டு போய் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *