சாலையில் தவறவிடப்பட்ட 83,000 ரொக்க பணம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு பத்திரத்தை 40 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது.
புதுக்கோட்டை புதுநகர் 2ம் வீதியை சேர்ந்த வீரராகவன் வயது 65. இவர் இன்று காலை தனது வீட்டிலிருந்து வேலை நிமிர்த்தமாக புதுக்கோட்டை டவுன் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது பழனியப்பா தியேட்டர் அருகே வீரராகவன் கொண்டு வந்த பை காணாமல் போய் உள்ளது.
மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த போக்குவரத்துக் காவலர் வரதராஜன் கைவிடப்பட்ட பையை எடுத்து ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது பையை தவறவிட்ட வீரராகவனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, தங்களுடைய பணம் மற்றும் பத்திரம் தன்னிடம் இருப்பதாகவும் போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து பெற்று செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து புதுக்கோட்டை போக்குவரத்து காவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்த வீரராகவனிடம் தவறவிடபட்ட பையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது பையில் 83 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு பத்திரம் இருந்ததை விசாரணை தெரிந்து கொண்ட காவல் துறையினர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வீரராகவன் அழைத்துச் செல்லப்பட்டு, அவர் தவற விட்ட ரொக்க பணம் மற்றும் வீட்டு பத்திரம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது.
40 நிமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பெற்றுக் கொண்ட வீரராகவன் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பணியில் இருக்கும் பொழுது கைவிடப்பட்ட பையை உரியவர்களிடம் ஒப்படைத்த போக்குவரத்துக் காவலர் வரதராஜனுக்கு, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். மேலும் வீரராகவனிடம் இது போன்ற பொருட்களை கொண்டு செல்லும் பொழுது கவனத்தோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தரும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆயுதப்படை டிஎஸ்பி ஜானகிராமன் போக்குவரத்து காவல் உதவியாளர் பிலிப்ஸ் சேவியர் போக்குவரத்து காவலர் வரதராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.