• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

Byமதி

Oct 31, 2021

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு தமிழக கேடர் பிரிவைச் சேர்ந்தவர் இளம்பகவத். தனது விடாமுயற்சியால் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார்.

இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழகன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. இவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய ரேங்க் 117வது இடத்தைப் பிடித்தார்.

இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழகன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர். வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி.

ப்ளஸ் டூ நேரத்தில் இளம்பகவத்தின் அப்பா இறந்து போக,. ஒற்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, விண்ணப்பித்தார். ஓர் ஆண்டு காலம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை.

“வாரிசு அடிப்படையிலான கருணைப் பணிக்கு, இடையில் புகுந்து சிலர் வேலை வாங்கிச் சென்றனர். ஒருகட்டத்தில் சலித்துப்போனவர், அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கு நடுவில் 2001-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார். அதன் பிறகு, “ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு எடுத்தேன்’’ என்கிறார் இளம்பகவத்.

2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 எழுதி, காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர், அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணி, இதற்கு நடுவில் 2010-ம் ஆண்டில் குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011-ம்ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. இப்படி 2007-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத். ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி விதவிதமான அரசுப் பணிகள் தேடிவந்தன. ஆனால், அவரது லட்சியம் அது அல்ல… ஐ.ஏ.எஸ்!

2005-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி, ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக 2016 ஆண்டு தன் கனவை எட்டிவிட்டார். அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்ற இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.