• Sat. Apr 20th, 2024

வாழத் தகுதியற்ற குடியிருப்புகள் அமைச்சர் தாமோ அன்பரசன் அறிவிப்பு

சென்னையில் இருந்த குடிசைப்பகுதிகளுக்கு மாற்றாகக் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 23 ஆயிரம் வீடுகள் வாழத் தகுதியற்றவை என அமைச்சர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா. மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.


சென்னை, திருவொற்றியூரில் நேற்று இடிந்துவிழுந்த குடிசைமாற்று வாரியப் பகுதியைப் பார்வையிட்டு, வீடுகளை இழந்த 24 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் வழங்கினார். அப்போது ஊடகத்தினரிடம் பேசுகையில், அவர் இதைத் தெரிவித்தார்.

குடிசைப் பகுதிகளை அகற்றி அங்கு வசித்தவர்களுக்காக, குடிசைப்பகுதி மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி 2021ஆம் ஆண்டுவரை மாநிலத்தில் 4 இலட்சத்து 13 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

சென்னைப் பெருநகர் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 31 ஆயிரம் குடும்பங்களுக்கு 732 குடிசைப்பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட மனைகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. மாநிலத்தில் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 1, 79, 386 அடுக்குமாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னைப் பகுதியில் மட்டும் 1, 20, 886 குடியிருப்புகள் உள்ளன.


இந்தக் குடியிருப்புகளில் பல பகுதிகளில் ஆயுள்காலம் தாண்டியும் மறுகட்டுமானம் செய்யப்படாத நிலையிலும், பராமரிக்கப்படாத காரணத்தாலும் வீடுகள் சிதிலமடைந்துள்ளன.
பொதுவாக, மாடிப்படிகள், படிக்கட்டுகளுக்கான நடு தரையிறக்கம், பால்கனி, தரைத்தளம், கூரைத்தளங்களில் பழுதுநீக்கம், குடிநீர், கழிவுநீரகற்ற குழாய்கள், கழிப்பிட பீங்கான்களை மாற்றுதல், கூரைத்தளத்தில் ஓடுபதித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், உரிய காலத்தில் இவற்றை மேற்கொள்வதில்லை.


ஏற்கெனவே 28ஆயிரத்து 247 குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதில், 2,500 குடியிருப்புகள் மீண்டும் கட்டப்பட்டுள்ளதாகவும் 11,408 குடியிருப்புகளின் மறுகட்டுமானப் பணிகளில் முன்னேற்றம் இருப்பதாகவும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், திருவொற்றியூர் அரிவாக்குளம் பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்துவிழுந்து தரைமட்டமாகியுள்ளன.பாதிப்பைப் பார்வையிட்ட அமைச்சர் அன்பரசன், “ இடிந்துவிழுந்த வீடுகள் 1993 ஆம் ஆண்டு கட்டப்பட்டவை. இவை, தட்பவெப்பநிலையின் காரணமாக சிதிலமடைந்து விழுந்துள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் சிதிலமைடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்ட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.”

என்றார்.அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சென்னையில் மட்டும், 45 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 23,000 வீடுகள் வாழ்வதற்கே தகுதியில்லாத நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் சிதிலமடைந்த வீடுகளைப் படிப்படியாக அகற்றிவிட்டு, புதிய குடியிருப்புகளைக் கட்டித்தர உத்தரவிட்டுள்ளார். இதற்காக, இந்த நிதி ஆண்டில் மட்டும் (2021 – 2022) 7500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூ. 2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.” என்றும் அவர் கூறினார்.இதற்கிடையே, “சென்னை நகருக்காக தினமும் உழைத்து வரும் இம்மக்களுக்கு உதவ குடிசைகளுக்குப் பதிலாக அரசு சார்பில் கட்டித்தரப்பட்ட பல குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் பலவீனமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளன.

1998ஆம் ஆண்டு திருவொற்றியூர் கிராமத்தெருவில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. அங்கு பாதுகாப்பற்ற குடியிருப்புகளில் குடியிருந்து வரும் 336 குடும்பங்கள் தற்போதும் அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற பாதுகாப்பற்ற குடியிருப்புகளில் வசிக்கும் மீதமுள்ள குடும்பங்களுக்கும் அரசு தலையிட்டு நிவாரணம் வழங்கி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்; இடிந்துவிழும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு பதிலாக அதே இடத்தில் புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும்; அதுவரை குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்; இப்பணியை உடனடியாகத் தொடங்கவேண்டும்.” என்று சி.பி.எம். கட்சி, தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாக அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *