



மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில. தலைவர் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா மீது சேலம் சைபர் க்ரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் உள்ளது. இங்கு சுப்பிரமணியசாமி கோயில் மற்றும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. சமீபத்தில் இக்கோயில் விவகாரம் தொடர்பாக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் மதுரை திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோயிலுக்குச் சொந்தமானது என்றும், அங்கிருக்கும் தர்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், இதுதொடர்பாக 1931-ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது எனவும் பேசினர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதாகவும், அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபுவிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

