தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில்,ஆர்வமுள்ள பட்டியல் இனத்தவர், மற்றும் பட்டியல் பழங்குடியினர் பிரிவு இளையோர் , மாணாக்கர் , தொழில் முனைவோர் , தொழில் அலகு உரிமையாளர் , மக்கள் பணியாற்றுவோர் , என ஏராளமானோர் கலந்து கொண்ட கருத்தரங்கில் திட்டம் குறித்த விரிவான விளக்கவுரைகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சி.கணேசன்,
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில்முனைவோர்க்கு மட்டுமேயான சிறப்புத் திட்டம் எனக் குறிப்பிட்டார் . மேலும், இத்திட்டத்தில் வேளாண்மை தவிர்த்து பிற அனைத்து உற்பத்தி , வணிகம் மற்றும் சேவைத் தொழில்களுக்கு மானியம் உண்டு என்றும், மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 % ஆகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சொந்த நிதியில் அல்லாமல் வங்கிக் கடன் பெற விரும்பினால் மீதமுள்ள 65 % வங்கிக் கடனாகப் பெற ஏற்பாடு செய்யப்படும் என்றும், பெறுகின்ற வங்கிக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 6 % வட்டி மானியமும் உண்டு என்று கூறிய அவர்,
புதிதாக தொழில் தொடங்குவோர் மட்டுமல்லாது ஏற்கெனவே இயங்கிக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்தவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும் கூட மானிய உதவி பெறலாம் என்றார்.மேலும், கூட்டதில், தொழில் தொடங்குவது மற்றும் அதனை வெற்றிகரமாக மேலாண்மை செய்வது குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துரை வழங்கினர் .மேலும் பங்கேற்றவர்கள் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் D. அனில், மாவட்டத் தாட்கோ மேலாளர் திருமதி ராஜேஸ்வரி, சிறு குறு தொழில்கள் மைய உதவி இயக்குனர் பி. ஜெயசெல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பல்வேறு தொழில் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.