• Fri. Apr 26th, 2024

அண்ணா திமுக மீண்டும் ஆட்சியில் அமரும்… கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

Byகாயத்ரி

Sep 26, 2022

சிவகாசியில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெறும் இக்கண்டண பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமையும் என்று சிவகாசியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்தும் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார்நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்க்காக பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த கண்டன பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் தொகுதி வாரியாக நடைபெற்று வருகின்றது. சிவகாசியில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி கழகம் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் நகர செயலாளர் அசன்பதூரூதீன் தலைமையில் நடைபெற்றது. சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது

திமுக விடியா அரசை கண்டித்து சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக் கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு வீர உரையாற்றுகின்றார். அவர்களோடு முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். பல்வேறு மாவட்ட கழக நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர் . இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமான முறையில் நடத்த வேண்டும் என்ற முறையில் தொகுதி வாரியாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. ஒரு சோதனையான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். அண்ணா திமுக ஆட்சியை இழக்கவில்லை. ஆட்சி பறிக்கப்பட்டு இருக்கின்றது. அதற்கு காரணம் எப்போதெல்லாம் அதிமுகவில் பிரச்சினை நிலவுகின்றதோ அப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்து விடுகின்றது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த இயக்கம் தான் இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மிட்டா மிராசுதாரர்களை நம்பி இந்த இயக்கத்தை புரட்சித் தலைவர் அவர்கள் தொடங்கவில்லை. ஒட்டிய வயிறையும் கிழிந்த சட்டையையும் பார்த்து தொடங்கப்பட்டதுதான் அண்ணா திமுக இயக்கம். சோதனைகள் வரும்போதெல்லாம் சாதனைகளாக்கி தொண்டர்கள் நிரம்பிய இயக்கம்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வளவோ திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஏராளமான அரசு கட்டிடங்களை கொண்டு வந்துள்ளோம். ஏராளமான பஸ் வழித்தடங்களை உருவாக்கி கொண்டு வந்துள்ளோம். பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களிடத்தில் நல்ல அபிப்பிராயங்களை எடுத்துள்ளோம். ஆனாலும் மக்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் வாங்க தவற விட்டோம்.

ஆகையால் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளோம். கடந்த பத்து ஆண்டுகளில் சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு, அச்சு தொழிலுக்கு பாதுகாவலனாக இருந்துள்ளேன். எல்லா தொழிலுக்கும் எடப்பாடியார் அவர்கள் உறுதுணையாக இருந்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில்தான் சிவகாசியை மாநகராட்சியாக மாற்றி அமைக்கப்பட்டது. மாநகராட்சிக்கு ரூ.5கோடியில் புதிய கட்டிடமும் கட்டி கொடுக்கப்பட்டது. சிவகாசியில் 100 கோடி ரூபாய் அளவில் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. என்னுடைய முயற்சியால் அதிமுக ஆட்சியில்தான் கொண்டாநகரம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. சிவகாசியில் சுற்றுச் சாலை திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கிடு செய்தது எடப்பாடியார் அவர்கள்தான். சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு பணிகளை தொடங்கி வைத்தவர் எடப்பாடியார் அவர்கள்தான். இப்போது இந்த ரயில்வே மேம்பால பணிகள் கமிஷன் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிவகாசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை அண்ணா திமுக அரசு உருவாக்கிக் கொடுத்தது. அதன் பயனாக இன்று கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிவகாசி பட்டாசு தீப்பெட்டி தொழிலை பாதுகாத்தது அண்ணா திமுக அரசாங்கம். பட்டாசு தொழிலில் 10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீப்பெட்டிக்கு 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை எங்களது முயற்சியால் 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. பட்டாசிற்கு 28 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியதன் காரணமாக 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. சிவகாசியில் பட்டாசு பயிற்சி மையத்தை உருவாக்கியது அம்மாவுடைய அரசாகும். பட்டாசு விபத்தின் போது பட்டாசு தொழிலை காப்பாற்றும் வகையில் சிவகாசியில் நவீன தீக்காய சிகிச்சை மையத்தை உருவாக்கியது கட்டிக் கொடுத்ததுபட்டாசு தொழிலுக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்றத்தில் அண்ணா திமுக அரசு தனி வழக்கறிஞரை நியமித்து வாதாடியது. 20 அண்ணா திமுக எம்பி களை அழைத்துக்கொண்டு நான் டெல்லியில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை பார்த்து பட்டாசு பிரச்சனைக்கு தீர்வு கண்டது அண்ணா திமுக அரசு இதேபோன்று திருத்தங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியது, திருத்தங்கலில் புதிய பஸ் ஸ்டாண்ட் உருவாக்கிக் கொடுத்தது அதிமுக ஆட்சியில்தான்.

சிவகாசி பஸ் ஸ்டாண்டு விரிவாக்கம் செய்து கொடுத்தது நான்தர்ன். சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் அளவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக அரசாங்கம் ஆகையால் வாக்காளர்களிடம் எப்போது வேண்டுமானாலும் தைரியமாக சந்திக்கலாம் வாக்குகள் கேட்கலாம். அண்ணா திமுக வாக்களிக்க வாக்காளர்கள் எப்போதும் தயாராக உள்ளனர். அடுத்து வரும் எம்பி தேர்தலோடு எம்எல்ஏ தேர்தலும் சேர்ந்து வரலாம். எனவே அண்ணா திமுக தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும். சிவகாசிக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் சிவகாசியில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெறும் கண்டண பொதுக்கூட்டம் அண்ணா திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமைய வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முத்துபாண்டியன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, முன்னாள் மாவட்ட இளைஞரணி அவைத் தலைவர் லட்சம், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம் , வெங்கடேஷ், சிவகாசி மாநகராட்சி பகுதி கழக செயலாளர் சரவணகுமார், கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி பாண்டியன், ஷாம் என்ற அபினேஷ் குமார், சிவகாசி ஒன்றிய கழக துணைச் செயலாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், சிவகாசி ஒன்றிய கழகப் பொருளாளர் கருப்பசாமி பாண்டியன், தலைமைக் கழக பேச்சாளர் சின்னத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி வெம்ப க்கோட்டை முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், மணிகண்டன் மாநகராட்சி கவுன்சிலர் கரை முருகன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், திருத்தங்கல் நகர அவை தலைவர் கோவில் பிள்ளை திருத்தங்கல் கூட்டுறவு சங்க தலைவர் ரமணா, திருத்தங்கல் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முருகேசன், அம்மா பேரவை திருமுருகன், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் உட்பட மாவட்ட கழக, நகர கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் மாநகரக் கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *