

பக்தியில் சிறந்த பக்தி ஆஞ்சநேயர் பக்தி என்பார்கள்.. ஆஞ்சநேயர் ஸ்ரீஇராமபிரான் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் கொண்டவர். அதனால் தான் கோவில்களிலும் கைகூப்பிய நிலையில் இருக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்கிறோம்.

சனி பகவானின் ஆதிக்கம் தான் நாம் வாழ்க்கையில் நடைபெறும் சகலத்துக்கும் காரணம் என்று நினைக்கிறோம். அதனால்தான் சனிப்பெயர்ச்சி என்றாலே நாம் பயப்படுகிறோம். ஆனால் ஆஞ்சநேயர் பக்தர்கள் சனிப்பெயர்ச்சி குறித்தோ, சனிபகவானே என்ன செய்வாரோ, என்ன நடக்குமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை.புராணங்கள் சொல்வது என்னவென்றால், ஆஞ்சநேயரின் அருளிருந்தால் சனி பகவானின் தாக்கம் அதிகமாக இருக்காது என்கிறது. ஆகையால்தான் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது எனபது மிகவும் விசேஷ பலன்களை தரக்கூடியது. சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது சகல எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கிவிடும். அது எப்படி என்ற கேள்வி எழலாம்.. இதற்கான பதில் சற்று ராமயணத்தை புரட்டி பார்க்க வேண்டும்.
ஒரு சமயம் ஆஞ்சநேயருக்கு சனி பிடிக்க வேண்டியக் காலம் வந்தது, அப்போது சனீஸ்வரன் உன்னைப் பிடிக்க வந்திருக்கிறான், உன் உடலில் ஏதேனும் ஒரு இடம் கொடு என்றார். அதற்கு ஆஞ்சநேயர் என்னை தற்போது சீதா தேவியை மீட்க சேது பந்தனப் பணியை மேற்கொண்டு வருகிறேன். பிறகு என்னை பிடித்துக்கொள் என்கிறார். அதற்கு சனீஸ்வரன் நான் சரியான காலத்தில் ஒருவரைப் பிடித்து, சரியான காலத்தில் விலகுபவன். காலதேவன் நிர்ணயித்த விதியை மீற முடியாது என்று கூறி, உன் உடலில் எந்த பாகத்தை நான் பிடிக்கலாம் என்று சனிபகவான் கேட்டார்.

பாறைகளில் ஸ்ரீராமஜெயம் என எழுதி தோளில் சுமந்து காலால் நடந்து கடலில் போடுவதால், இங்கெல்லாம் பிடிக்க வேண்டாம். வேண்டுமென்றால் உடலுக்கு தலையே பிரதாணம் என்பதால் என் தலைமீது அமர்ந்துகொண்டு உங்கள் கடமையை செய்யுங்கள் என்றார் ஆஞ்சநேயர்.இதுவரை ஆஞ்சநேயர் சுமந்த பெரிய பாறைகளின் பாரம், தற்போது ஆஞ்சநேயரின் தலையில் அமர்ந்திருந்த சனீஸ்வரன் சுமக்க நேரிட்டது. பாரத்தை தாங்கமுடியாத சனீஸ்வரன், சிறிது நேரத்தில் ஆஞ்சநேயரின் தலையில் இருந்து இறங்கினார். ஏழரை ஆண்டுகளுக்கு பதிலாக ஏழரை வினாடி என்னை பிடித்துக்கொண்டீர்கள் என ஆஞ்சநேயர் கூறினார். ஸ்ரீ ராம ஜெயம் என எழுதிய பாறையை என்மீது வைத்து சுமந்தால் நானும் ராம சேவையில் ஈடுபட்ட பாக்கியம் கிடைத்தது. அதனால் , உனக்கு ஏதேனும் ஒரு வரம் தர விரும்புகிறேன் என்றார் சனி.
ஆஞ்சநேயரோ, “ராம நாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவருக்கு ஏழரை சனி காலமாக இருந்தாலும் , அவருக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்கள் தான் காத்தருள வேண்டும்” என்று வேண்டினார்.
அனுமனை வணங்க வேண்டிய முறை
‘ஓம் ஹம் ஹனுமதே நம..’ என்ற மந்திரத்தை சொல்லி, அனுமனின் தலையில் துளசிகளும், வாசனை மலர்களும் வைத்தால் கஷ்டங்கள் யாவும் பறந்துபோய்விடும். கோதுமையில் செய்த ரொட்டியை, பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை அவரவர் வசதிக்கு ஏற்ப படைத்து சனிக்கிழமைதோறும் வழிபட வேண்டும். ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்து செந்தூரத்தை பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் விரும்பிய பலன்களை பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும், துளசி மாலையும் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டுவதை எல்லாம் தந்தருள்வார். அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்று, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு செய்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் துன்பங்கள் எல்லாம் அந்த வெண்ணெய் போலவே உருகிப்போய்விடும்.
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வேண்டுங்கள்… உங்களின் கோரிக்கை எல்லாவற்றையும் தீர்த்துவைப்பார்.

