கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்து வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலியை, வனத்துறையினர் தேக்கடி புலிகள் சரணாலயத்தின் உள்வனப்பகுதியில் திறந்துவிட்டனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செல்லார் கோவில் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் நுழைந்த புலி ஒன்று, வீட்டு வளர்ப்பு நாய் ஒன்றைப் பிடித்துக் கொண்டு சென்றது. அப்போது அப்பகுதி
ஏலத்தோட்டம் ஒன்றில் உள்ள 15 – அடி உயரமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது.
காலையில், தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றவர்கள் கிணற்றிலிருந்து புலி உறுமும் சப்தம் கேட்கவே, அருகே சென்ற பார்த்தபோது கிணற்றுக்குள் புலி ஒரு நாயுடன் கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டனர். இதை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் தேக்கடி பெரியார் வனவிலங்கு ஆராய்ச்சி நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலியை வனத்துறையினர் வனவிலங்கு மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தினர்.
சோதனையில், புலி உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து வனத்துறையினர் மயக்கம் தெளிந்து கூண்டுக்குள் இருந்த புலியை, வனத்துறையினரின் வாகனத்தில் ஏற்றி, தேக்கடி புலிகள் சரணாலத்தின் உள்வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக திறந்து விட்டனர்.