திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் பகுதியில், பழமையான நடுகல் புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. வைணவ ஸ்தலங்களில் குடவறை கோவில் என்ற சிறப்பும் இந்தக் கோவிலுக்கு உண்டு. மிகப் பழமையான இந்தக் கோவிலில் பல கல் வெட்டுகள் ஏற்கனவே கண்டெடுக்கப் பட்டுள்ளன.
மேலும் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் அரிய வகை புடைப்பு சிற்பம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் உத்தரவின் பேரில், கோவிலின் அருகில் மண் மூடிக்கிடந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டு மறைந்து கிடந்த நடுகல் புடைப்பு சிற்பம் மீட்டெடுக்கப்பட்டது. இது குறித்து கோவிலின் கல்வெட்டுகள் குறித்த ஆவணங்களில், குதிரை வீரன் மற்றும் போர் வீரன் நடுகல் புடைப்பு சிற்பமான இது கிபி 17 – 18ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் என்று தெரிய வந்தது. இது குறித்து 1922ம் ஆண்டு தொல்லியல் ஆவணங்களில், கிபி 17 – 18ம் நூற்றாண்டு இந்திய கல்வெட்டு அறிக்கை என்றும் அதில், திருத்தங்கல் மலைக்கோவில் வடக்குப் பகுதியில் உள்ள தனிப் பாறையில் உள்ளது. இது ஒரு நடுகல் சிற்பத் தொகுதியை ஒட்டிய கல்வெட்டாகும். ‘கலங்காத கண்ட நாயக்கருக்காக’ இத்திருத்தங்கல் சீமை ரத்தக்காணிக்கையாக கொடுக்கப்பட்டதை தெரிவிக்கிறது என்று ஆவணக் குறிப்பின் மூலம் அறிய முடிகிறது. மிகப் பழமையான, புராதான நடுகல் புடைப்பு சிற்பம் திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவிலில் மீட்டெடுக்கப்பட்டிருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது..