சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவில் பூச்சொரிதல் விழா, பெண்கள் பூத்தட்டு எடுத்து நான்குரதவீதி வலம்வந்தனர். அம்மன் மின் ஒளி அலங்காரத்தில் வானவேடிக்கையுடன் மேளதாளத்துடன் பவனிவந்தது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை அன்று திருவிழா கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும் இதில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இருந்தும், அண்டைமாநிலமான புதுச்சேரி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா ஆகியே மாநிலங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசித்துச் செல்வார்கள். இதேபோல் இந்த ஆண்டு வருகிற மே 22 ஆம் தேதி ஜெனகைமாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இதையொட்டி நகரத்தார்கள் சார்பாக 52ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டிமேளதாளத்துடன், வாணவேடிக்கையுடன் அம்மன் மின் அலங்காரத்தில் நான்கு ரத வீதி பவனி வந்தது. இதில் பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து நகரத்தார் பால்குடம் எடுத்து வந்தனர். அர்ச்சகர் சண்முகவேல் அம்மனுக்கு பால் உட்பட 12 திரவிய பொருள்களால் அபிஷேகம் நடைபெற்று பூச்சொரிதல் விழா சிறப்பு பூஜை நடத்தினர். இதில் கோவில் செயல்அலுவலர் இளமதி முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன், நகரத்தார் நிர்வாகிகள் பழக்கடை முருகேசன், ராஜேந்திரன், நாச்சியப்பன், சேதுசம்பத், முத்து உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.