• Tue. Apr 23rd, 2024

பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த -அன்புமணி ராமதாஸ்

ஆவின் நிறுவனத்திற்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் இடையே பேச்சு நடப்பதற்கும், பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படுவதற்கும் தமிழக முதல்வர் உதவ வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று முதல் பால் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். உற்பத்தியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பசும்பாலை லிட்டர் ரூ.35 என்ற விலைக்கும், எருமைப்பாலை லிட்டர் ரூ.44 என்ற விலைக்கும் கொள்முதல் செய்கிறது. பாலுக்கான உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது, அதற்கான கொள்முதல் விலை மிகவும் குறைவு என்பதால் பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 10ம் தேதி முதலாகவே தமிழகத்தில் சில பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பால் விற்பனையை நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று நடத்திய பேச்சுகள் தோல்வியடைந்தததைத் தொடர்ந்தே பால் நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற உற்பத்தியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானதே. மாட்டுத் தீவனம் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்திருப்பதால் பாலுக்கான உற்பத்திச் செலவும் அதிகரித்திருக்கிறது.அதை ஈடுகட்ட பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டியது அரசின் கடமை ஆகும். தனியார் நிறுவனங்கள் பாலின் கொழுப்பு அளவைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.47 வரை வழங்குகின்றன. ஆனால், ஆவின் நிறுவனம் ரூ.35 முதல் ரூ.44 என்ற மிகக்குறைந்த விலைக்கே பாலை கொள்முதல் செய்கிறது.

பால் கொள்முதல் விலை உயர்வு என்ற கோரிக்கை புதிதல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரி வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தியது.

மீதமுள்ள 7 ரூபாயை இப்போது உயர்த்தி வழங்க வேண்டும் என்று தான் உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை தமிழக அரசு உணர்ந்து கொண்டு பால் கொள்முதல் விலையை இயன்ற அளவு உயர்த்தி வழங்குவதற்கு முன்வர வேண்டும். ஆவின் கொள்முதலுக்கான பாலை உற்பத்தியாளர்கள் நிறுத்தினால், முதலில் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். கடந்த சில நாட்களாகவே உற்பத்தியாளர்கள் பாலை நிறுத்தி விட்டதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஆவின் பாலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 25 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கிறது. ஆவின் நிறுவனத்திற்கு உற்பத்தியாளர்கள் பால் வழங்குவதை நிறுத்தி விட்டால், நாளை முதல் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அது ஆவின் பாலை நம்பியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும். தமிழகத்தில் ஆவின் பாலை விட தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.12 முதல் ரூ.26 வரை அதிகமாக உள்ளது.

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் பொதுமக்கள் ஒரு லிட்டர் பாலை ரூ.26 வரை அதிகமாகக் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அத்துடன் ஆவின் பாலின் சந்தைப் பங்கு இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு, தனியார் பால் வினியோகம் அதிகரிக்கப்படாவிட்டால் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால், அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, தமிழக முதல்வர் முகஸ்டாலின், உடனடியாக இந்த சிக்கலில் தலையிட்டு, ஆவின் நிறுவனத்திற்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் இடையே பேச்சு நடப்பதற்கும், பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படுவதற்கும் உதவ வேண்டும். பால் உற்பத்தியாளர்களும் பால் நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு, தமிழக அரசுடன் பேசி கோரிக்கைகளை வென்றெடுக்க முன்வர வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *