சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. தீயின் கோரப்பிடியில் சிக்கி தொழிலாளர்கள் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் சோங்காவ் நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் காலை இந்த தொழிற்சாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு தீப்பற்றியது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, தொழிற்சாலை முழுவதும் பரவியது.
இதனால் பீதியடைந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு தொழிற்சாலையை விட்டு ஓட்டம் பிடித்தனர். எனினும் அதிவேகத்தில் பரவிய தீ, தொழிற்சாலையின் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டது. இதில் தொழிலாளர்கள் பலர் உள்ளே சிக்கி கொண்டனர். இதனிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும் தீயின் கோரப்பிடியில் சிக்கி தொழிலாளர்கள் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் பலத்த தீக்கயாம் அடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள்.