T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் ‘சூப்பர்-12’ சுற்று தொடங்கியுள்ளது.
சூப்பர்-12 சுற்றின் முதல் போட்டியில், ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான தேம்பா பாவுமா, குயின்டன் டி காக், ராசி வான் டெர் டஸன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். நிதானமாக ஆடிய ஐடன் மார்க்ராம் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா.
இதில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச் டக் அவுட்டானார். அதன் பின்பு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து விளையாடி 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து தென்னாப்பிரிக்கா முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நடந்த 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின:
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது.

கிறிஸ் கெய்ல் அடித்த 13 ரன்களே அந்த அணியில் ஒர் வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. டி-20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி எடுத்த 3-வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இதையடுத்து 56 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய இங்கிலாந்து அணி எளிதாக அந்த ரன்னை எடுத்து வெற்றி பெற்றது.