


கோவையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற வர்த்தக உச்சி மாநாட்டில் பேசிய மொரிசியஸ் தூதர் முகேஸ்வர் சூனே, இந்திய தொழில்முனைவோர் எப்போது வேண்டுமானாலும் மொரிஷியஸ் நாட்டில் தொழில் துவங்கலாம் எனவும், அதற்கு 24 மணி நேரத்தில் தொழில் துவங்க ஒப்புதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்தியா, மொரிஷியஸ் வர்த்தக உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான தொழில் முனைவோர்கள், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டை தொடர்ந்து இந்திய மொரிசியஸ் வர்த்தக மாநாட்டில் இந்தியாவுக்கான மொரிசியஸ் தூதர் முகேஸ்வர் சூனே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,மொரீசியஸ் நாடு சின்ன, தனியான தீவு என்றே பொதுவாக கருதப்பட்டு வந்தது. 1968 ம் ஆண்டுதான் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. தற்போது எங்களது வளர்ச்சியை கண்டு உலகம் வியக்கிறது. இந்தியா மொரிசியஸ் ஆகிய நாடுகளை பிரித்து பார்க்க இயலாது.

இந்த ஆண்டு மொரிசியஸ் சுதந்திர தினவிழாவில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது எங்களுக்கு பெருமை. கடந்த ஆண்டு இந்திய குடியரசு தலைவர் பங்கேற்று கவுரவித்ததை மறக்க முடியாது.மொரிசியஸ் நாடு உலகில் 150 நாடுகளுடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களை கொண்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டம் முழுக்க எங்களது உற்பத்தி பொருட்கள் சென்றடைகின்றன.

இந்தியா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், பிரான்ஸ், பிரிட்டன் என உலகின் முன்னணி நாடுகளுடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களை கொண்டுள்ளோம்.இந்தியா என்றைக்கும் எங்களது நட்பு நாடு. இங்கு எங்களது 70 சதவீத முதலீடுகளை கொண்டுள்ளோம்.
மொரிசியஸ் நாட்டில் நவீன ஜவுளி, மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் அதிகம் உற்பத்தியாகிறது. உலகம் முழுக்க தரமான ஆயத்த ஆடைகளை அனுப்புகிறோம். இந்திய பெருநிறுவனங்கள் அங்கு கிளை பரப்பி உள்ளன.
இந்திய தொழில்முனைவோர் எப்போது வேண்டுமானாலும் எங்கள் நாட்டில் தொழில்துவங்கலாம். 24 மணி நேரத்தில் தொழில் துவங்க ஒப்புதல் வழங்கப்படும். மொரிசியஸ் நாட்டில் ஸ்திரமான அரசு அமைந்துள்ளதால் அரசியல் குழப்பங்கள் ஏதுமில்லை. நீங்கள் அங்கு நம்பிக்கையுடன், தாராளமான அளவில் முதலீடு செய்யலாம். இந்தியர்களுக்கு எங்கள் நாட்டிற்கு வர விசா தேவை இல்லை.நீங்கள் தொழில் நடத்த அறுபது ஆண்டுகளுக்கு நிலங்கள் வாடகைக்கு கிடைக்கும். சினிமா எடுக்க மொரிசியஸ் சிறப்பு திட்டம் வைத்துள்ளது.இந்தியர்கள் குறைந்த செலவில் எங்கள் நாட்டில் சினிமா எடுக்கலாம். அதற்கு எங்களது இயற்கை இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். நவீன ஸ்டியோக்கள் உள்ளன. உலகின் அனைத்து நாட்டு முகங்களையும் அங்குகாணலாம்.
சாதி, மத பாகுபாடற்ற அமைதியான நாடு மொரிசியஸ். நீங்கள் தாராளமாக அங்கு வந்து தொழில் துவங்கலாம். கோவைக்கு சிறிய வகை தொழில்களுக்கு இந்திய அளவில் பெயர் பெற்றதை அறிந்தேன். இந்தியாவில் பத்து ஆண்டுகள் பணியாற்றினாலும் கோவை நான் வருவது இதுவே முதல்முறை. கல்வி, மருத்துவம், தொழில்துறையில் சிறந்த நகரமான கோவையில் இருந்து எங்கள் நாட்டில் தொழில்துவங்க முன்வருமாறு தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களை அழைக்கிறேன் என தெரிவித்தார்.

