உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது என்று அமேசான் CEO ஆண்டி ஜாஸ்ஸி ட்வீட் செய்துள்ளார்.
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படாததால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், ஒருபக்கம் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
இந்த போரால் ரஷ்யா தரப்பில் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் பலியாகிவிட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவிற்கு வெளியே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு பீரங்கிகள் வரிசையாக நிற்கின்ற நிலையில் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் இருந்து வருகிறது. உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் போர் தீவிரமாக நடந்து வருகிறது.
உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்பை சேர்ந்த பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உதவி வழங்கி ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது, தொடர்ந்து உதவி செய்யும். நன்கொடைகள், இணைய பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக அமேசான் CEO ஆண்டி ஜாஸ்ஸி கூறியுள்ளார்.