• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக உள்ளார்களா?

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பச்சி விளக்கமளித்துள்ளார். ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து கடந்த 7 நாள்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷியப் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

இதையடுத்து உக்ரைன் நகரங்களில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகின்றது. உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு வரும்படி அனைவருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
தொடர்ந்து, அண்டை நாடுகளுக்கு செல்வதற்காக ரயில் ஏறச் சென்ற இந்திய மாணவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டும் விடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இதற்கிடையே இந்திய மாணவர்களை உக்ரைன் படைகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ரஷிய தூதரகம் குற்றச்சாட்டு எழுப்பியது.

இந்நிலையில், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,”உக்ரைனிலுள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் நேற்று பல மாணவர்கள் கார்கிவ் நகரைவிட்டு வெளியேறியுள்ளனர். பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக எந்த புகாரும் வரவில்லை.
கார்கிவ் மற்றும் பிற நகரங்களிலிருந்து மேற்கு பகுதிகளுக்கு வருவதற்கு இந்திய மாணவர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க உக்ரைன் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரஷியா, போலாந்து, ரோமானியா, கங்கரி உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். சில நாள்களிலேயே அதிகளவிலான இந்தியர்கள் உக்ரைனைவிட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைன் அதிகாரிகளின் இந்த உதவிக்கு பாராட்டை தெரிவித்து கொள்கிறோம். இந்தியர்களை தங்க வைத்த உக்ரைனின் மேற்கு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.”